Pages

Tuesday, June 15, 2010

பிள்ளையார் சுழி

கவிதைகள் சிந்தித்து..

காலம் மறந்து...

கால் போன திசையில் நடந்து...

கரைந்து போன காலங்கள்

திரும்ப வருமா என்ற கனவோடு...

Monday, June 14, 2010

முதல் வணக்கம்

கவிதைகளா?

கிலோ எவ்வளவு என்று தான் கேட்டிருப்பேன்

18 வருடங்களுக்கு முன்பு

என் வாழ்க்கையில் நீ வராது போயிருந்தால்...

Sunday, June 13, 2010

நடை பயிற்ச்சி

***********************
என்னவள் குருடி!
எதிரே நானிருந்தால்...
***********************

கொளுத்தும் கத்திரி காலத்தில்
எனக்கு மட்டும் குளிர் சாதன வசதி!
....அருகே என்னவள்
***************************

Saturday, June 12, 2010

நினைவு ஸ்ருதி!

********************************************
இதை பதிவு செய்யாது போனால் குற்றவாளியாவேன்!
"என் இதய மாளிகையின் இரண்டாவது மாடியில் நீ!"
என்று உயிர் நண்பனின் பிறந்த நாளில்
நீ அருகில் இருக்க கவிதை சொன்னேன்.

முதல் மாடியில் யார்? என்று
நீ கேட்ப்பாயென்ற நப்பாசையோடு...

பொருளாக பரிசு தர இயலாத காலம் அது...
எனவே கவனம் திருப்ப குருதி ஆகியிருந்தது பேனா மையாக!

எல்லாம் படித்துவிட்டு சொன்னாய்....
"இரத்தம் சிகப்பு போதலை!"
***********************************************

Friday, June 11, 2010

நினைவு சிதறல்

..எத்தனையோ முறை
உன் மடி மீதும், தோள் மீதும்
அழுது கரைத்திருக்கிறேன்
என் சோகங்களை
......

இழப்புகள் குறித்தும்...,
தோல்விகள் குறித்தும்...
இன்னும் எதெற்கெதெற்க்காகவோ!
...........
இறுதியாக ஒரு முறை...
நீ எனக்கு இல்லாமல் போனது குறித்தும்!

Thursday, June 10, 2010

நினைவு சிதறல்

உன் 'கலகல' குரலோசையில்
கலக்கத் துடிக்கிறது என் மனம்
அருகே அமர்ந்து
ஆத்திச்சூடியேனும் சொல்லேன்!

Wednesday, June 9, 2010

நினைவு சிதறல்

நிலம் போல் மனம்...
காக்கை, குருவி சிதற்றிய விதையாய்
காற்று வழியே கலந்து விழுந்த விதையாய்
ஏதேனும் ஓர் விதை
எப்போதும் விழுந்தபடி...

பல நேரங்களில்
விழுந்ததும் விளைந்ததும்
நெறிஞ்சி முட்கள் தான்
சில நேரங்களில் சிறு மல்லிகள் சில...

உண்மையை சொன்னால்
உன்னால் விழுந்ததும், விளைந்ததும்
பூ!

Monday, June 7, 2010

ஞானத் தேடல்.....


ஆழ்ந்த இருள் போர்த்தி
அமிழ்ந்திருந்த காலங்களில்
'வெளிச்ச தண்ணீர்' தாகம் எடுத்து
வெகு தூரம் அலைந்திருக்கிறேன்...

வழி தெரியாது போய்
அருகிருந்த அசைவுகளை கேட்க

'கிழக்கு திசை பார்த்து காத்திருக்க சொல்லி'
குரல் ஒன்று சொன்னது!

வருடக் கணக்கில் காத்திருந்தும்
கீற்றாய் கூட ஒளியில்லை
கிழக்கு அடி வானில்!

திசை மாற்றி உதயம் வருமோவென்று
எண் திசை பார்த்து காத்திருந்தும்
எத்திசையும் உதிக்கவில்லை
என் மனச்சூரியன் -
"நான்" இறக்கும் நாள் வரை!
........................................
..........சென்ற வாரம் இறந்து போன
எதிர் வீட்டு ஜோசியன்
எதிர் படும் போது சொன்னான்
'என் மகன் தேடிக் கொண்டிருப்பதாகவும்,
அவன் மகன் தேட போவதாகவும்!'
***************

Sunday, June 6, 2010

நெஞ்சுக்குழி நினைவு


காதலில் திளைத்து
காமத்தில் கரைந்து
கடந்து போயிருக்கவேண்டும்!

உன்னை நானும்!
என்னை நீயும்!

உனக்கு நான் எப்படியோ
எனக்கு நீ உயிர் போகும் நேரம்
உறுத்தப் போகும்
நெஞ்சுக்குழி நினைவுகளென!

Saturday, June 5, 2010

உன்னை தெரிந்துகொள்ள...

நீ யார் என்பதை தெரிந்து கொள்ள
நீயாக இல்லாத ஒருவரை 'யார்' என்று
தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.


கசப்பின் கசப்பை உண்டு
தெரிந்து கொண்டேன்
இனிப்பின் இனிப்பை!


இன்று உன்னை தெரிந்தாலும்
வருந்துகிறேன்...
நேற்று உன்னை இழந்ததை நினைத்து!

--------------------------------------------

ஒரே லயம்!

---------------------------------------------

உன்னை 'தொலைத்ததை' அறியாமல்
உன்னையல்லாத எல்லோரையும்
'தொலைத்தேன்'!
மற்ற எல்லோரையும்
தொலைத்த பின் தெரிகிறது
உண்மையில்
உன்னைத்தான்
'தொலைத்தேன்' என்று...

Friday, June 4, 2010

காதலும், காமமும்!

காதலும், காமமும்
உன்னிடம் பேசியிருக்கிறேன்
ஒரு போதும்
'விரசம்' பேசியதில்லை!

நீயோ
நான் பேசிய
காமமெல்லாம் விரசமென்றாய்!

அது கூட பரவாயில்லை...
நான் பேசிய
காதலும் கூட
காமம் என்றாய்!

என் இதயம்
வெடிக்கும் ஓசையை
நிதானமாய் கேட்டபடி!

Thursday, June 3, 2010

'தொலைப்பு பத்திரம்'

நீ எனக்கு இல்லாது போனதை
அச்சடித்து சொன்ன ஒரு நாளில்...


இதயம் நடுங்க
'உன்னை தொலைத்துவிட்டேன்'!
என்று உறுக்கமாய் சொன்னேன்
யாரிடமும் பகிர்ந்திடாத
இரு பக்க கவிதை ஒன்றில்!


உனக்கும் கூட தெரியாது
அன்று உன்னை நான் 'தொலைத்தேன்' என்று...


வருடங்கள் பல உருண்டோடி
எதிர் பாராத ஓர் அலை பேசி தொடர்பில்
'குசலங்கள்' விசாரித்து...
'இடையோடிய காலம்' பேசி...
தயக்கமாய் சொன்னேன் 'தொலைத்ததை!'


எல்லாவற்றையும்
மௌனமாக கேட்டுவிட்டு
உறுதிப்படுத்திக் கொள்ளவோ,
உன்னை மையப்படுத்தி எழுதியது
என்று சேகரித்து வைத்து கொள்ளவோ,
கேட்க்கிறாய்....


ஏழு வருடங்கள் முன்பு
எழுதிய கவிதையை மட்டும்!

Wednesday, June 2, 2010

'பசிக்கிறது'

எனக்கு அவ்வப்போது
'பசிக்கிறது' என்றேன்.


'பசி' என்னைப் பொறுத்தவரை
நியாயமே என்றாலும்
காலம் கடந்த காரணத்தினால்
உன்னை பொறுத்தவரை
நியாயமேயில்லை!


எதை எதையோ பேசி
பின் இதை பேசி
பேசிய பின்
"பேசியது குற்றம்" என்று
காதோரம் கிசு கிசுக்கிறது
என் மனம்....


உணர்ந்ததை - உணர்த்தியதை
சொன்னேன்!
குற்றமாய் படவில்லை எனக்கு!


உணர்ந்திருந்தாலும்...
சத்தமாகவோ, சன்னமாகவோ
ஏதும் சொல்லிவிட முடியாது உனக்கு!


எனக்கு தெரியாதா என்ன?
நீ புத்த பிக்ஷினி இல்லையென்று!


'இதை' பேசியதனால்
உன் மனதில் நானும்
சராசரி பிராஜைகளில் ஒருவனாகி
நடந்து, கடந்து போவேனா
தெரியாதெனக்கு!


'பேசியது' தந்த குழப்பம் தீராது
உன் எல்லைகளுக்குள்
உன்னை பார்த்தபடி
உறங்கிப்போவேன் இன்றிரவு!


நாளை
ஒரு வேளை
'கிறுக்கு' தெளிந்திருக்கும் எனக்கு!

Tuesday, June 1, 2010

சந்தையில்....

புத்தனை புரிந்து..
ஜே.கே. வை விளக்கி பேசி..
ஸ்ரீ ரஜ்னீஷின் சிரிப்பில் லயித்து...
ஏசுவில் ஐக்கியமாவது சிந்தித்து...

சந்தையில்...
மொத்தமாக தொலைந்து போகிறேன் நான்!