Pages

Sunday, May 30, 2010

முழு பிறை!

பூபாளம் பாடி
பூமிக்கு வராத சூரியன்!


கதிரவன் வந்தும்
கரைந்து போகாத பனித்துளி!


தாலாட்டு கேட்டும்
தூங்க மறுக்கும் குழந்தை!


என் காதல் மொழி கேட்டு
கனிய மறுக்கும் நீ!

Saturday, May 29, 2010

வாழாது விட்ட...

மல்லாக்க படுத்து..
உத்திரத்தை பார்த்து..
கற்பனை வெளிகளில்
கை வீசி கால் வீசி நடந்து...
கனவென்று உணராத கிரக்கத்தில்...
காலங்கள் கழித்த பின்...
வருந்த சொல்கிறது வாழ்க்கை
வாழாது விட்ட காலங்களுக்காக!

Friday, May 28, 2010

ஓலை வீடு...

நடுநிசியில் மழை வந்து
ஓலைகளின் ஓட்டைகளில்
ஒழுகி ஒழுகி சொல்லும்
'ஓலையெல்லாம் ஓட்டை' என்று!

தூக்கம் கெட்டதில்
கோபம் வந்து
வீட்டு உரிமையாளரிடம்
கோபம் விழுங்கி விண்ணப்பிப்பேன்
'சீர்' செய்ய...

விண்ணப்பத்தின் விளைவாய்....
சீர் செய்ய வந்து செல்வர்
சீரில்லா சில பேர்.

போகும் போது
'இனி ஒழுகாது'
என்று உத்திரவாதம்
தந்து செல்வர்!

இனி காத்திருக்கோணும்...
அடுத்த மழை வந்து...
உண்மை சொல்லும் நாள் வரை!

Saturday, May 15, 2010

கூடோடான காலம்...

கூடிரண்டு
உள்ளிருக்கம் உண்மைகளால்
உரசிக்கொள்ள....

கூடியது
கூடோடு கூடியதொரு காலம்...

பின்னரெல்லாம்
தொடர்புகள்...

கூடுக்கும் கூடுக்கும் தான்

...எப்போதேனும்
விழி வழியே
உயிருக்கும் உயிருக்கும்....

கூடெடுத்ததன் காரணம் அறியாது...
கூடு கரைக்கும் மார்க்கம் உணராது...
கரைந்து போகிறது!


கூடோடு கூடிய இந்த காலம்...!

Friday, May 14, 2010

உளியும்....சுத்தியும்.....!

எல்லோர் கையிலும்
எப்போதும் இருக்கிறது!



வீட்டில் இருப்போர் - இல்லாதோர்
தெருவில் போவோர் - வருவோர்....
எல்லோரிடமும்!
எப்போதும்!



எப்போதும்....
இக்கரங்கள்.....
செதுக்க ஏற்ற நேரம் பார்த்தபடி....



யார் யாரோ
செதுக்குகிறார்கள்!



வீட்டில், வெளியில்...
தெருவில், தேனீர் கடையில்....
எங்கெங்கோ....



ஐய்யோ....அலுவளகங்கள்....
எந்நேரமும் கேட்கலாம்
ஏதோ ஒரு மூலையில்
செதுக்கும் ஒளிகளை!



'நல்ல' மகன்
'திறமையான' உழைப்பாளி
'பொறுப்பான' கணவன்
என எப்படி எப்படியோ...



செதுக்கி செதுக்கி
நினைத்தது வராமல்
இன்னும் இன்னும் செதுக்கள்கள்....



நிஜ உருவை
உருக்குலைத்து
உயிர் குடித்த செதுக்கள்கள்!



செதுக்க பட்ட நானும்
செதுக்க பட்ட நீயும் சேர்க்கப்பட்டோம்.



விடிந்து பார்த்தால்
ஐய்யோ.....!
என் கையிலும் இருக்கிறது
உளியும்....! சுத்தியும்....!

Thursday, May 13, 2010

காற்று புகாமல்....

உன்னை காற்று புகாமல்
கட்டி அணைக்கும்
எல்லா தருணங்களிலும்.....


இரண்டர கலந்துவிட வேண்டும்
என்றே நினைக்கிறேன்!


என்ன தான்
இயற்கையின் விதியோ....


கட்டி பிரிந்த
நொடி முதலே..


நீ உன்னிடத்திலும்
நான் என்னிடத்திலும்!

ஒரு அலுவலக பிரிவு!

இது வரை...
கேலியும்...கிண்டலும்...
சிரிப்பும்...சந்தோஷமும் தான்
உனக்கும் - எனக்கும் இடையே!


எனக்கு முதியவளான உன்னிடம்
எதேனும் தீர்வு சொல்வாய், சொல்லாய்
என்ற சிந்தனைகள் இன்றி...

என் துக்கம், மகிழ்ச்சியை
பகிர்ந்திட நினைத்ததுண்டு!


வந்து போன நாளில்
வராமலே போய் விட்டது....
அப்படி ஒரு நாள்!


'நாளை பிரிவேன்' என்று
இன்று நீ சொல்வது
உறுத்துகிறது உள்ளத்தை!


என்ன சொல்வது
என்றரியாது சொல்கிறேன் - சொன்னவற்றை!


இத்தனையும் சொல்லிவிட
இன்று அவசியமில்லை தான்
எனினும்......


'நில்' என்றால்
நிற்கவா செய்கிறது
கனக்கும் நெஞ்சிருந்து
கசியும் வார்த்தைகள்!

Wednesday, May 12, 2010

"னாநா...னாநா..."

உடுப்புகள் அனிந்து
வெளியே போக தயாராக இருக்கிறேன்
என்று கண்டு கொள்கிறது
ஒன்றரை வயது பெண் குழந்தை!


என் அசைவுகளில்
கவனம் கொண்டிருந்து...
வெளி கிளம்பும் நேரம் பார்த்து
தத்தி தத்தி நடந்து வந்து
கட்டி பிடித்து கொள்கிறாள்
தன்னையும் கூட்டி செல்ல
சொல்லும் அடத்துடன்!


'வேற வேலையா போறேன்'
என்றதற்க்கு...
"னாநா...னாநா..." என்கிறாள்
'போகாதே எங்கேயும்' என்னும் விதமாய்!


பின்னர்
ஏதோ நினைத்து
அவள் ஆசை புரியாத எனக்கு
என் பணி நிமித்தங்கள் புரிந்தவள் போல்
"டாடா...டாடா..." என்கிறாள் ....சிரித்த முகமாய்!

Thursday, May 6, 2010

மழையில் நனைந்து..மழையாய் இருந்து..

மழை வந்த நாளெல்லாம்
எனக்கு....
மழையில் நனைந்து
மழையாய் இருந்து பார்க்கும் ஆசை!




சிறு வயதிலேயே
என்னையும், மழையையும்
'சீக்கு வரும்' என்று சொல்லி
பிரித்து வைத்தார்கள்!




அன்று முதல்
மழையில் நனையும்
வெறும் கனவுகளில் கரைகிறது
என் மழைக்காலங்கள்!




என் நிலை இப்படி
பிறர் நிலை எப்படி?
என்று நெருங்கிய நண்பர்களை விசாரித்தால்....



ஒருவன்
போர்வையின் பயனை
அன்று தான் உணர்வேன் என்றும்,



மற்றொருவன்
மதுவின் பயன் அன்று தான் புரியும் என்றும்



இன்னும் பிற
மழையில்லா
ஆனால் மழைக்கால
செயல்கள்!



என்றேனும்
ஒரு நாள்
மழையில் நனைந்து...
மழையாய் இருந்து.....!

Wednesday, May 5, 2010

ரோஜா ஞானம்!!!!

பறிக்கும் போதெல்லாம்
குத்தும் முள்ளுடன் ஆன ரோஜா.

முள்ளில்லாத ரோஜா
தேடி அலைந்த மனம்.

முள்ளில்லாத ரோஜா
என்று நினைத்து பறித்த போதெல்லாம்
முள் உண்டு என்று
உணர்த்திய ரோஜாக்கள்.

முள்ளில்லாத ரோஜாவை
இயற்கை படைக்கவேயில்லை
என்பதை உணர்ந்த மனம்.

முதலில் "பீயங்காடு" என்றறி!

பீயங்காட்டு வழி பயணம்....

வெகு காலம் பயணித்திருக்கிறேன்....

...மல நாற்றம் தாங்க மாட்டாதும்
...பன்றிகள் தொந்தரவு பொறுக்க மாட்டாதும்

கொப்புளித்த கோவம் எல்லாம்
உடல் தன்மை கெடுத்தபடி!

பல வருடம் கழித்தே...
புரிந்திருக்கிறது!
என் பயணம் 'பீயங்காடு' வழியென்று!!

எப்போதும் பன்றிகளை
தீண்டியதாக நினைவில்லை எனக்கு.

எனினும் பன்றிகள் யாவற்றுக்கும்
மலம் உண்ணும் விழைவாய்
போவோர் வருவோரின்
ஆசனம் முகர்வதே பிழைப்பு!


முகர்ந்தது பன்றியின் ஆசனமே
என்பதை கண்டு கொண்டால்....
ஐய்யோ!
மகிழ்ந்து மலம் உண்பவர் கண்ட
மட்டற்ற மகிழ்ச்சியில்...
கூடி குலாவுகின்றன
....வாய்ப்பு கிடைத்த போதெல்லாம்
'இனத்தை' இனம் கண்ட மகிழ்ச்சியில்!

வகை வகையாய் பன்றிகள்....

இணை பன்றிகளை கவரும்
முயற்ச்சியில்
முதுகெலும்பில்லாத செயலில் ஈடுபடும்
அரை கிழவன் என்பதை மறந்த பன்றி!

அகங்காரத்தை
ஆதாரமாக்கி....
செத்த பழமை பீற்றி....
தன் ஆனவம்
செல்லுபடி ஆகும் இடம்
என்றரிந்து தெளிவாய்
தன் வினோத வீரத்தை
வெளிப்படுத்தும் பன்றி!

தன் மல நாடி முகரும் பன்றி
என்ற வாஞ்சையில்
செய்த குற்றம் யாவும்
குற்றம் செய்யாதான் பால்
சுலபமாய் சுமத்தும்
தலைப் பன்றி!

தலைப் பன்றி
தாலாட்டில் மயங்கி
காண்பதெல்லாம் மஞ்சலாய் காட்டும்
மஞ்ச காமாலை நோய் மகிழ்ந்து பெறும்
தன் தலை மறந்த பன்றி!

தான் என்ற கர்வம் களையாது
தன் அடி வருடிய
நபும்சக பன்றி என
அது போதிக்கும் பொய்களின் ஆதாரத்தில்
திசை தெரியாது
முட்டி மோதும்
முட்டாள் பன்றி!

சற்றே கவனம் செலுத்தி பார்த்தால்
பன்றிகள் யாவற்றுக்கும்
உணவாய்
உணர்வாய்
நினைவாய்
நிஜமாய்
கனவாய்
காலமாய்
எல்லாமுமாக எப்போதும் இருக்கிறது மலம்!

மலம் மாற்றி மலம் உண்பதே
இவைகளின் வாழ்வு சுருதி!

எவ்வளவு மலம் உண்ண முடிந்தது என்பதே
இவைகளின் திறமையின் வீச்சு!

பன்றிகளை பன்றிகள் என்றும்
பயணம் மலக்காடு வழியென்றும்
எனக்கு புரிந்ததை
புரிந்த நாள் முதல்


அடி படும் அச்சத்தில்....
அசிங்கப்படாதிருக்கும் அவசியத்தில்....
தன் உண்மை உணர்ந்திடாத போதும்
விலகி செல்கின்றன பன்றிகள்!

என் போல்
பீயங்காட்டு வழி பயணியர்
யாரேனும் இருப்பின்.....

அனுபவஸ்தன் வார்த்தைகள்....

முதலில் "பீயங்காடு" என்றறி!

Tuesday, May 4, 2010

இமயங்களுக்கு அப்பால்....

பெண்ணே!
எனக்கு முன்னால் வரும்போது மட்டும்
நிர்வாணமாக வா!

நானும்
உனக்கு முன்னால் மட்டும்
நிர்வாணமாக வருவேன்!

நம்
நிர்வாணங்களுக்கு மட்டும்
பழக்கமும், பரிச்சயமும்
ஏற்படட்டும்!

முதன் முதலாக
நீ என்னை சந்திக்க வரும்
அந்த நாளில்....

...உன் இயல்பு நடையில் வா!
இந்த உலகம் உன்னை
பார்க்க உன்னில் நீ மாற்றி அமைத்த
நளினம் தொலைத்த நடை மறந்து...
உன் சொந்த நடையில் வா!

உன் குழந்தையின் குறுநடையை
காமம் கலக்காது
பார்க்க தெரியும்
என் கண்களுக்கு!

உன்னை ஊர் திரும்பி
பார்ப்பதற்க்காக
உன் விருப்பம் இல்லாது போயினும்...
உடுத்தும் உடை விடுத்து
உன்னை கவர்ந்த
உன்னை உறுத்தாத
உடையில் வா!

உன் உடையின் பின்னால்
இருக்கும் உன்னை
உணர தெரியும் எனக்கு!

வா!
உன் போலித்தனங்களை
மொத்தமாய் கொளுத்திவிட்டு,
உன் நிர்வாணத்தின்
பிறப்போடு வா!

நானும்
என் நிர்வாணத்தின்
பிறப்பெடுத்து
உனக்கென காத்திருப்பேன்!


நம் நிர்வாணங்கள்
சந்திக்கும் முதல் நாளில்...
என்னில் எஞ்சிய போலி தனங்கள்
ஏதேனும் கண்டால்....
களைந்தெரிய தயங்காதே பெண்ணே!

நானும் களையெடுக்க தயங்க மாட்டேன்!

வா!
நம் நிர்வாணத்தின் அஸ்த்திவாரத்தோடு
இமயங்களுக்கு அப்பால்
இனியதொரு உலகம் செய்வோம்!

இனி வரும்
பிறவியிலேனும்
இமயங்களுக்கு அப்பால்
இனிதாய் துவங்குவோம்!

கற்பனை வெளிகளும்...நிஜ பிரதேசங்களும்...

கற்பனை வெளி

மதிய நேர இள மழை....
புல்லின் வாசம் வீசும்
நம் மறைவான
சந்திப்பு தோட்டம்...

அருகே...
நல் குளிர் குளம்...
நீந்தி களிக்கும் நீர் பறவைகள்...
பூக்க துவங்கும் அல்லி...
பூவின் பின்னால்
ஒளியும் மீன் கூட்டம்...
...ஒரு வேளை....
அவற்றின் 'மறைவு தோட்டம்'?....

உன் வரவிற்க்கு
காத்திருந்த நான்...

என் சிந்தை ஈர்க்கும் விதம்
திருத்தமான ஆடை...
தீற்றாய் தின்னூறு...
ஒற்றை சன்ன சங்கலி...
காதோரம் ஊஞ்சலாடும் தோடு...
கரும்பழுப்பு கூந்தலில்....

மணக்கும் உன்னால்
மணக்கும் மலர்!

எனக்கான மலர்தலுடுன்
யவ்வனித்திருக்கும்
என்னுயிராகும் உன்னுயிர்...

கரம் பிடித்து...
காதோரம்...
நீ மயங்க...
உன் அழகு போற்றி...

நம்மை
எப்போதும் சுமக்கும்
நம் வசந்த மரத்தின்
அடியில் அமர்ந்து
பேசினோம்....
பல நேரம் பேசியவற்றை...
புத்தம் புதிதாய்....

பின்...
மாலை மயங்க மயங்க...

என் மார் சாய்ந்து கிறங்கி நீயும்
என் கண் மூடி உன்னை அணைத்து நானும்...

என்னுள்ளான உன்னில் நானும்
உன்னுள்ளான் என்னில் நீயும்...
கரைந்து போனோம்....

இதமான காற்றுடன்...
இருள் வந்து
நம்மை எழுப்பும் வரை!

நிஜம்....

சுட்டெரிக்கும்
சித்திரை சூரியன்!

சுழன்றடிக்கும் வெப்ப காற்று!!

கற்பனை வெளிகளில்
தூக்கி எறியப்பட்டு....

கை வீசி
கால் வீசி
பித்தம் பிடித்து
நடக்கும் மனம்!

Monday, May 3, 2010

நான் நீ ரசிக்கும் நீ ரசிக்கும்....

இதுவும்
நாம் பார்த்த
வழக்கமான வெண் திரை படங்களில்
ஒன்று தான்.

நாயகன்
நாயகியை
விரட்டி விரட்டி காதலித்து....

நாயகி
இடைவேளை வரை
விலகி விலகி...விலகி விலகி....

இடைவேளை தருணத்தில்
சம்மதம் சொல்லி...


வில்லன் அவதாரங்களும்
சிறுவர்களின்
தீபாவளி சமய
துப்பாக்கி சண்டையுமாய்
சுபத்துடன் முடியும்...

நாம் பல முறை பார்த்த
அதே வெண்திரை காவியம்!

...இருந்தும்
ரசித்து பார்க்கிறேன்
உன்னோடு சேர்ந்து நானும்!

நான் ரசிக்கும் நீ ரசிக்கும் காரணத்தால்!

சாவு பூ!

முதன் முதலாய்...
பெட்டிக்கடை தாத்தாவின்
மரணத்தில் அறிமுகமானது
அந்த பூ வாசம்.....

பின்னர்...
எதிர் வீட்டு
பூ விற்கும் பாட்டியின் மரணத்தில்...

பின் அந்த பூ வாசம்
வரும் போதெல்லாம்
எனக்கு எங்கோ
மரணம் நிகழ்ந்ததாய் எண்ணம்!
உண்மையில் மரணம் நிகழாத போதும்!!

ஊருக்கு அது சம்பங்கி
எனக்கு அது சாவு பூ!!!

உன் பிறந்த நாளில்.....

என் கவி திறமை வளர
நல் ஊக்கங்கள் அளித்த தோழி,

திடீரென ஒரு நாள்...
"நாளை என் பிறந்த நாள்" என்றாய்
"பரிசாக ஒரே ஒரு கவிதை" என்றாய்
எப்போதேனும் கவிதை முயலும் நான்
எப்படி ஒரு குறுகிய கால கவிதை சொல்வது
என்று குழம்பி தான் போனேன்!

பின் சொன்னேன்
பின் வருவனவற்றை...

'சிலரின் பிறந்த நாளுக்கென
சில காரணங்களுக்காக காத்திருப்பேன்

என் ஆக்க விதை ஒன்றிர்க்கு
ஊக்க நீரூற்றி ஊக்க நீரூற்றி
அவ்விதை விட்டு
விருட்சங்கள் வளர்வதை
என் கண்களாலேயே காண செய்த
உன் பிறந்த நாளுக்கெனவும்

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" சொல்ல

உற்றுக் கேள்
"நன்றி" எனும்
இத்தனை வார்த்தையும்!

Sunday, May 2, 2010

கடந்து போகும் பேருந்தில்...

விடியும் வரை...
உன் நினைவில் திளைத்து,
விடிந்த பின்....
உன் கனவுகளில் உறங்கி,


உறங்கியவுடன் விழித்து...


அன்றாட அலுவல்களை
அரை குறையாய் - அவசரமாய்

நிறைவேற்றி,


சட்டையை திருப்பி அனிந்து,
திருப்பி அனிந்ததை திருத்தி அனிந்து,


இரு விள்ளல் இட்டிலி...
ஒரு கோப்பை குடிநீர்...


அவசரமாய் பேருந்து நிலையம்
ஓடோடி வந்து சேர்ந்தால்,
கடந்து போகும் பேருந்தில்
அரை மனதாய்
ஓர் இதழோர புன்னகையுடன் நீ!


இதற்காய் இத்தனை அல்லல்
என்ற என் மனம்
அடுத்த நொடி
ஆனந்த கூத்தாடி
ஆர்ப்பரித்து குதிக்கிறது
எனக்கென நீ ஈந்த
அந்த அரை மன புன்னகைக்கென!